"மக்கள் கேட்காத திட்டங்களைத்தான்தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது":சீமான் குற்றச்சாட்டு
“மக்கள் கேட்காத திட்டங்களைத்தான் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது” என்று சீமான் குற்றம் சாட்டினார்.
"மக்கள் கேட்காத திட்டங்களைத்தான் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநாடு
இலங்கையில் விடுதலை போராட்டம் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது. 1 லட்சத்து 75 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டில் எங்கும் நடக்காத மிகப்பெரிய இனப்படுகொலை ஆகும். மே மாதம் 18-ந் தேதி போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளை இனப்படுகொலை நாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர்.
அதனை இன எழுச்சி நாளாக கருதி மீண்டும் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பாக இதனை பயன்படுத்துகிறோம். அதற்காக ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு தூத்துக்குடியில் இன்று (வியாழக்கிழமை) மாநாடு நடக்கிறது.
மக்கள் கேட்காத திட்டங்கள்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருவார்கள் என்பதுதான் தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனையாக உள்ளது. ஆசிரியர் தேர்வு எழுதி காத்திருக்கிறோம், பணி தாருங்கள் என்கிறார்கள். மக்கள் நலப்பணியாளர்கள், மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். அவர்கள் கேட்பதை எல்லாம் நிராகரித்து விட்டார்கள். அதனை விடுத்து குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000, டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று மக்கள் கேட்காததை இலவசம் என்ற பெயரில் வழங்கி வருகின்றனர். மக்கள் பணத்தை எடுத்து மக்களிடமே கொடுப்பதற்கு பெயர்தான் இலவசம். தரமான கல்வி, மின்சாரம், குடிநீர், சரியான பாதை ஆகியவற்றைதான் மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் கேட்காத திட்டங்களை தான் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும்
பனம்பால் (கள்) உணவின் ஒருபகுதி என்று கூறப்படுகிறது. இந்த கள் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கள் விற்றால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும். இதனால் கள்ளை தடை செய்கிறார்கள்.
போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?. நீட் தேர்வை முதலில் காங்கிரஸ் கொண்டு வந்தபோது தி.மு.க. வரவேற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டது யார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே போலீசார் துப்பாக்கியுடன் தயாராக இருந்து உள்ளனர். துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை நடக்கிறது. வடமாநிலத்தவர்கள் தான் இதில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வேல்ராஜ், வக்கீல் பாண்டியன், சுப்பையா பாண்டியன், மாநில மகளிர் பாசறை அருண்சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
----------