நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது முதல்-அமைச்சர் பேச்சு


நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது முதல்-அமைச்சர் பேச்சு
x

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று சென்னையில் நடந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழக தொழில் துறை சார்பில், சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் ரூ.212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து சமூக வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதை உள்ளடக்கிய இந்த திராவிட மாடல் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.

இதில் தொழில்துறையின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தொழில்துறையானது மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான்காம் தலைமுறை

மேம்பட்ட உற்பத்தி மையம் தொடர்பான மாநாடாக இது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக நாம் எட்டுவோம்.

தற்போதுள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். அவற்றை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக உருவாக்க வேண்டும். அதன் மூலமாக மின்னணு மயமாக்கப்பட்ட உற்பத்தியை செயல்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி பலமடங்கு உயரும்.

தலைசிறந்த இடம்

295 பில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

இவற்றோடு நாம் மனநிறைவு அடைந்துவிடாமல் 2030-ம் ஆண்டில், நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் நமது அரசு வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

புதிய தொழில் வாய்ப்பு

சூரிய எரிசக்தி, மின்னணுவியல், மின்வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஜவுளிகள், கூட்டு உற்பத்தி, முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல், ரோபோடிக்ஸ் ஆகியவை புதிய தொழில் வாய்ப்பு உள்ள துறைகளாக அறியப்பட்டிருக்கிறது.

இந்தத் துறைகளின் உற்பத்தியில் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும், தொழில்முறை 4.0 தரத்தையும் அறிமுகப்படுத்தி, தமிழகத் தொழில்துறைச் சூழலை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்துவது நமது தொழில் சூழலை மேலும் செம்மைப்படுத்த வழிவகுக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்.

தொழில்துறையினருக்கு ஒரு சாதகமான களம் உருவாக்கித் தரப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நவீன உத்திகளுக்கும், புதுப்புது திட்டப்பணிகளுக்கும் வழிவகை செய்து தரப்படும்.

விரைவில் தொடக்கம்

இதன்மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில் மாநிலமாக வளர்ச்சி அடைவது உறுதி செய்யப்படும். டிட்கோ நிறுவனம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான 'சீமென்ஸ்' உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் துவக்கிவைக்கப்பட இருக்கிறது.

தொழில்துறை மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற துறைகளும், மேம்பட்ட உற்பத்தித் தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி வருகின்றது. ரூ.2,877 கோடியே 43 லட்சம் செலவில் இவை அமைக்கப்பட இருக்கிறது.

நாட்டின் வளர்ச்சி

இதன்மூலம், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியினால் ஏற்படவுள்ள தொடர் மாற்றங்களை, நமது தொழிலாளர்கள் சுலபமாகக் கையாள முடியும். இதனைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துடன் இணைந்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்திடவும், புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்திடவும், அத்துறையினரின் பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தீர்த்து வைக்கக்கூடிய வகையில், ''வளர் 4.0'' என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறது.

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் நம்மிடம் இருக்கிறது. அதற்கான பணியாளர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். உங்கள் வளர்ச்சிதான் நம் மாநிலத்தின் வளர்ச்சி. நம் மாநிலத்தின் வளர்ச்சிதான் நம் நாட்டின் வளர்ச்சி. உலக அரங்கில் தமிழ்நாட்டினை நோக்கி கவனம் ஈர்க்கக்கூடிய முயற்சிகளை நிச்சயமாக இவை அனைத்தும் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

மாநாட்டில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளீதரன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, டசால்ட் சிஸ்டம்ஸ் மேலாண்மை இயக்குநர் என்.ஜி.தீபக், போர்ஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர் வானவராயர், தொழிலதிபர்கள், தொழிலகங்களின் தலைமை செயல் அலுவலர்கள், அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story