கட்சிக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகள் பதவி பெறும்போது விமர்சிப்பது தவறு- தமிழச்சி தங்கபாண்டியன்
கட்சிக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகள் பதவி பெறும்போது விமர்சிப்பது தவறு என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூறினார்.
கட்சிக்காக உழைத்த தலைவர்களின் வாரிசுகள் பதவி பெறும்போது விமர்சிப்பது தவறு என தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கூறினார்.
பொதுக்கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கும்பகோணத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. தலைமை தாங்கினார்.
ராமலிங்கம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விமர்சனம் செய்வது தவறு
தமிழகத்தில் வாரிசு அரசியல் பற்றி சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். தி.மு.க. தலைவர்களின் வாரிசுகள் எத்தனை ஆண்டுகள் சிறையில் வாடினார்கள். மிசா சட்டம் பாய்ந்தபோது தங்களுடைய குடும்பம், தங்களுடைய எதிர்காலம் குறித்து எதுவுமே தெரியாமல் எத்தனை ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தார்கள்.
இதையெல்லாம் நினைத்து பார்த்தால் வாரிசு அரசியல் குறித்து யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். கட்சிக்காக உழைத்த அத்தகைய தலைவர்களின் வாரிசுகள் பதவியை உரிய நேரத்தில் பெறும்போது அதனை விமர்சனம் செய்வது தவறு.
அறிந்திருக்க வாய்ப்பில்லை
தனது மனைவி குழந்தைகளை தனிமையில் விட்டு சிறையில் வாடிய தலைவர்களையும், அவர்களை பார்க்க முடியாமல் ஏங்கித்தவித்த மனைவி மற்றும் குழந்தைகளின் மனநிலையையும் தற்போது விமர்சனம் செய்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வாரிசு என்பதற்காக பதவி வழங்கி விட முடியாது. உலகிலேயே மிகப்பெரிய வரலாறு கொண்டுள்ள கட்சி தி.மு.க. மட்டும் தான். சிறந்த முறையில் தி.மு.க.வை வழி நடத்திச்சென்ற பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது பெருமையாக உள்ளது.
பா.ஜனதா கட்சியினருக்கு உணர்த்த வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையுடன், பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மதத்தின் பெயரால் சர்ச்சைகளை ஏற்படுத்தி அரசியல் செய்து வரும் பா.ஜனதா கட்சியினருக்கு பேராசிரியர் அன்பழகன் போன்ற தலைவர்கள் எவ்வாறு சிறந்த முறையில் அரசியல் பணி செய்துள்ளார் என்பதையும், கட்சியையும், ஆட்சியையும் எவ்வாறு வழிநடத்தினர் என்பதையும் நாம் உணர்த்த வேண்டும்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டுவரும் திட்டங்கள் நாடு முழுவதும் பாராட்டப்படுகின்றன. அவர் செயல்படுத்தி வரும் திட்டங்களால் தி.மு.க. மக்கள் மனதில் வேரூன்றி நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு நன்றி கூறினார்.