அய்யப்பசாமி திருவீதி உலா
அய்யப்பசாமி திருவீதி உலா
தளி,
உடுமலையை அடுத்த சின்ன வாளவாடியில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வளாகத்தில் விநாயகர், அய்யப்பசாமி, பாலமுருகன், கருப்பண்ணசாமி, கடுத்தசாமி, ராகு, கேது மற்றும் மஞ்சமாதா உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்குள்ள அய்யப்பசாமி கோவிலில் கடந்த 7 வருடங்களாக அய்யப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8- ம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்றுகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு விநாயகர் மற்றும் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள கடவுள்களுக்கு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதையடுத்து காலை 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் அய்யப்பசாமி திருவீதி உலா தொடங்கியது.சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பசாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொதுமக்கள் திரண்டு வந்து அய்யப்பனை சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.மண்டல பூஜையை யொட்டி கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.