ஊசிமலை ரோப் கார் திட்டம் நிராகரிப்பு


ஊசிமலை ரோப் கார் திட்டம் நிராகரிப்பு
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊசிமலை ரோப் கார் திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊசிமலை ரோப் கார் திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ஊசிமலை காட்சிமுனை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா திட்டங்கள் பெரிய அளவில் இல்லை. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். அவர்கள் கூடலூர்-ஊட்டி சாலையில் உள்ள யூகலிப்டஸ் மரப்பண்ணை, ஊசிமலை காட்சி முனையை கண்டு ரசித்து வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊசிமலை காட்சி முனையில் கடந்த காலங்களில் சினிமா படப்பிடிப்புகள் அதிகளவு நடைபெற்று வந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் பள்ளத்தாக்குகளை ரசித்து வந்தனர். ஆனால், சுற்றுலா பயணிகளின் போர்வையில் காட்சிமுனை பகுதியில் சமூக விரோதிகள் நுழைந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

பராமரிப்பு பணிகள்

இதையடுத்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வனத்துறை சார்பில் ஊசிமலை காட்சிமுனைக்கு செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது அதிக சுற்றுலா பயணிகள் வந்து காட்சிமுனையை ரசித்து வருகின்றனர்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடமாடும் கழிப்பறைகளும் உள்ளது. போதிய வருவாய் கிடைப்பதால் ஊசிமலை காட்சிமுனை பகுதியில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சம் இன்றி வந்து செல்கின்றனர்.

ரோப் கார் திட்டம் நிராகரிப்பு

இந்தநிலையில் ஊசிமலை காட்சி முனை பகுதியில் ரோப் கார் சேவை தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஊட்டியில் தொட்டபெட்டா முதல் வேலிவியூ வரை சுற்றுலா நிர்வாகம் மூலம் ரோப் கார் திட்டம் செயல்படுத்த வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஊசிமலை ரோப் கார் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு கொடைக்கானல் முதல் பழனி வரை உள்ள ரோப் கார் திட்டம் மட்டும் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊசிமலை ரோப் கார் திட்டம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்த திட்டத்தின் படி சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் இருந்து ஊசிமலை பாறை வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இருப்பினும், மீண்டும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்து, அனுமதி பெற முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். ஊசிமலை காட்சிமுனையில் ரோப் கார் திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.


Next Story