ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ, ஜியோ ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

ஜாக்டோ- ஜியோ எனப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ -ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டரை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, செவிலியர், கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர் உள்ளிட்டவருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில உயர்மட்ட குழு ஸ்டான்லி, சுப்பு, அல்லாபிச்சை, சாம் மாணிக்கராஜ், ராஜ்குமார், ஜான் பாரதிதாசன், பன்னீர்செல்வம், செந்தூர்பாண்டியன், ஐவன், மகாராஜன், சையது யூசுப் கான் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story