ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2023 1:00 AM IST (Updated: 1 March 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் சேலம் மாவட்ட அளவில் போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளருமான கோவிந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் திருமுருகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி சேலத்தில் உண்ணாவிரத போராட்டமும், 24-ந் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் கூறும் போது, 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தார். எனவே, தற்போது அவர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளோம்' என்றார்.


Next Story