சேலம் மார்க்கெட்டில்வெல்லம் விலை வீழ்ச்சி


சேலம் மார்க்கெட்டில்வெல்லம் விலை வீழ்ச்சி
x

சேலம் மார்க்கெட்டில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சேலம்

அன்னதானப்பட்டி,

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை அதன் விவசாயிகள் சேலம் அன்னதானப்பட்டியை அடுத்த, மூலப்பிள்ளையார் கோவில், வண்டிக்காரன் நகர் பகுதியில் உள்ள கரும்பு வெல்லம் உற்பத்தி விவசாயிகள் சங்கத்தில் பொது ஏலத்தில் விற்பனை செய்து வருகிறார்கள். இங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஏலம் நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், ஆடித்திருவிழா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெல்லம் விற்பனை களைகட்டும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000- க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சேலம் மார்க்கெட்டுக்கு தினமும் 30 டன் வரை வெல்லம் விற்பனைக்கு வருகிறது. தற்போது பண்டிகை சீசன் என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டுள்ளது. அவற்றை லாரிகள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.

கடந்த மாதம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் குண்டு வெல்லம் ரூ.1,350 வரை என விற்கப்பட்டது. தற்போது வெல்லம் வரத்து அதிகரித்து உள்ளதால், சிப்பத்திற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக சிப்பம் ரூ.1,250 முதல் ரூ.1,300 வரை என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெல்லம் ரூ.42 முதல் ரூ.44 வரை என விற்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story