கணவர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
கணவர் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மதுரை உசிலம்பட்டியை அடுத்த மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). டிரைவர். இவரது மனைவி சசிகலா. வரதட்சணை தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் சசிகலா தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அங்கு அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது கணவர் மணிகண்டன், இவருடைய தாயார் தங்கத்தாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, அவரது கணவர் கிங், லட்டுத்தாய் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் காவேரி சாந்தியும், தீக்குளித்து இறந்த சசிகலாவின் குடும்பத்தினர் தரப்பில் வக்கீல் பரிமளாதேவியும் ஆஜரானார்கள். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது மணிகண்டனின் தந்தை ராமன் இறந்துவிட்டார். விசாரணை முடிவில், மணிகண்டனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அவரது தாயார் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். அபராதத்தொகை ரூ.2 லட்சத்தை மணிகண்டனின் மகனுக்கு வழங்கும்படி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.