2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ஓசூர் பகுதியில் நடந்த வெவ்வேறு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஓசூர்:
ஓசூர் பகுதியில் நடந்த வெவ்வேறு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 2 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நகை திருட்டு
ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதையன் (வயது52). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி இவரது வீட்டில் மர்ம நபர் நுழைந்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். இது குறித்து மாதையன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிங்கு நகரை சேர்ந்த லூர்துராஜ் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அதே ஆண்டு ஜூன் மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு, ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சவித்ரா, லூர்துராஜுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
4 ஆண்டு சிறை
ஓசூர் அருகே ஜொனபண்டா பகுதியை சேர்ந்த யாசின் என்பவரது மனைவி ஷாஜியா (37). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி இரவு இவரது வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்து ரூ.3 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றார். இது குறித்து ஷாஜியா கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மாதப்பன் (26) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சவித்ரா, திருட்டில் ஈடுபட்ட மாதப்பனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.