விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருக்கும், உறவினர்கள் சிலருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் பரமசிவம் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில் பரமசிவத்தின் உறவினரான கர்ணன் உள்ளிட்ட சிலர் மீது கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தர்மபுரி கூடுதல் மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் குற்றம் உறுதியானதால் கர்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மதுவர்ஷினி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் உள்ள செல்வம், சாந்தி ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.