மாற்றுத்திறனாளி அக்காள், தம்பி கொலை: தாய் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை-ஓசூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி அக்காள், தம்பியை கொலை செய்த வழக்கில், தாய் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.
ஓசூர்:
மாற்றுத்திறனாளி அக்காள், தம்பி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பென்னங்கூர் அருகே உள்ள எண்ணேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி வெங்கடலட்சுமி (வயது 40). இந்த தம்பதிக்கு மஞ்சு (23) என்ற மகளும், முத்தப்பா (22) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் 2 பேரும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இதனிடையே கணவர் சீனிவாசன் பிரிந்து சென்றுவிட்டதால் வெங்கடலட்சுமி எண்ணேஸ்வரத்தை சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு, அவருடன் வசித்து வந்தார். இதனால் மஞ்சு, முத்தப்பா ஆகியோர் வெங்கடலட்சுமியின் தந்தை நாகப்பா பராமரிப்பில் இருந்து வந்தனர்.
வீட்டில் இருந்து மாயம்
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டில் இருந்த மஞ்சு, முத்தப்பா திடீரென மாயமாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கலுகொண்டப்பள்ளி அருகே உள்ள பெரியமேன அகரம் கிராமத்தில் மஞ்சுவும், சாரண்டப்பள்ளி அருகே முத்தப்பாவும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் உடல்களை கைப்பற்றிய தளி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடலட்சுமியின் தந்தை நாகப்பா, தனது நிலத்தை விற்ற பணத்தில் 4 மகன்கள், 2 மகள்களுக்கு ரூ.2 லட்சமும், மஞ்சு, முத்தப்பாவை பராமரித்து வந்ததால் வெங்கடலட்சுமிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்ததும் தெரியவந்தது.
தாய் உள்பட 5 பேர் கைது
இதனால் மஞ்சு, முத்தப்பா இருக்கும் வரை தனக்கு பணம் கிடைக்காது என வெங்கடலட்சுமி எண்ணியதும், இதனால் தனது 2-வது கணவர் சுரேஷ், இவருடைய தம்பி கோபால் என்கிற கோபி (30), இவருடைய மனைவி சாந்தி (33) மற்றும் கார் டிரைவரான நவீன்குமார் (30) ஆகியோருடன் சேர்ந்து சாரண்டப்பள்ளியில் வைத்து மஞ்சு, முத்தப்பாவை கொலை செய்ததும் தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தளி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஆயுள் தண்டனை
வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளியான அக்காள், தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக வெங்கடலட்சுமி, சுரேஷ், கோபால், சாந்தி, நவீன்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ரோஸ்லின் துரை தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.