சிறுமியை கடத்தி திருமணம் செய்தவாலிபர் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறைகிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர், உறுதுணையாக இருந்த அவரது நண்பர் இருவருக்கும், தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறுமியை கடத்தி திருமணம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை மோரமடுகு அடுத்த கோவில்கொட்டாயை சேர்ந்த வேடியப்பன் (வயது 28) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். அவரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வேடியப்பன் தனது நண்பர் குணசேகர் (29) என்பவருடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வேடியப்பன், குணசேகர் இருவரையும் கைதுசெய்தனர்.
20 ஆண்டு சிறை
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பன், அவருக்கு துணையாக இருந்த குணசேகர் ஆகிய 2 பேருக்கும் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.