அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்களை சேதப்படுத்திரகளையில் ஈடுபட்ட கிராம உதவியாளருக்கு சிறைவிருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு
அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட கிராம உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
விருத்தாசலம்,
மூச்சுத்திணறலால் பாதிப்பு
விருத்தாசலம் மேட்டு காலனியை சேர்ந்தவர் கலியன் மகன் வேல்முருகன் (வயது 39). இவர் விருத்தாசலம் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தங்கை சுஜாதா(36). அண்ணன்-தங்கை இருவரும் கடந்த 17.5.2018 அன்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட கலியனை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் விஜயவதி மற்றும் செவிலியர்கள், கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கலியனை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.
உயிர்காக்கும் கருவிகள் சேதம்
இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், சுஜாதா ஆகியோர் எங்கள் தந்தைக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறி ஆபாசமாக திட்டி டாக்டருக்கும், ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் வேல்முருகன், ஆஸ்பத்திரியில் இருந்த உயிர்காக்கும் கருவி, இ.சி.ஜி. கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகிய கருவிகளை சேதப்படுத்தினார்.
இதுகுறித்து அப்போதைய தலைமை மருத்துவ அதிகாரி, விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்ட வேல்முருகன், சுஜாதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.7¼ லட்சம் நஷ்டஈடு
இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாசந்திரன் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட வேல்முருகனுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்த உயிர்காக்கும் கருவிகளை சேதப்படுத்தியதற்காக ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கவும், சுஜாதாவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், அதனை கட்ட தவறினால் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.
பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்ப்பு
இதுகுறித்து வக்கீல் சுப்பிரமணியன் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டவருக்கு, தமிழ்நாடு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இது தான் முதல்முறையாகும். ஆஸ்பத்திரிக்கும், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.