பெண் உள்பட 7 பேருக்கு சிறை தண்டனை


பெண் உள்பட 7 பேருக்கு சிறை தண்டனை
x

முன்விரோதம் காரணமாக வீட்டுக்கு தீ வைத்த வழக்கில் பெண் உள்பட 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி உடையார் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் விமல். அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் தங்கை கணவர் மின்டோ மார்லின் என்கிற பாபு என்பவரை கொலை செய்த வழக்கில் விமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் நடராஜனுக்கும், குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு நடராஜன் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்.அப்போது நடராஜனுடைய வீட்டுக்குள் புகுந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றதோடு அந்த வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதில், அந்த வீடு தீயில் எரிந்து முற்றிலும் நாசமடைந்தது.

7 ஆண்டு சிறை தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் குணசேகரன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார்.

அப்போது, குணசேகரன் (வயது 58), பாலையன் (70), கார்த்திக் (33), பெரியமுனுசாமி (48), உஷா (43), சின்ன முனுசாமி (45), தியாகராஜன் (69) ஆகிய 7 பேருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் தலா 8 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராம.சேயோன் ஆஜரானார்.


Next Story