போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
சொத்து பிரச்சினையை முறையாக விசாரிக்காததால் போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சொத்து பிரச்சினையை முறையாக விசாரிக்காததால் போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
சிறைக்காவலர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருக்கு ராஜா (வயது 45), நிர்மல், சதீஸ் ஆகிய 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகனான ராஜா லால்குடி கிளை சிறையில் முதல்நிலை காவலராக உள்ளார்.
ராஜாவுக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25-ந்தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் 2 தரப்பினரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராஜாவின் மனைவி விஜயா, நிர்மலின் மனைவி ஜெனித்தா ஜாக்குலின் ஆகியோர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொற்செழியன் விசாரணை நடத்தி மனு ரசீது வழங்கியுள்ளார்.
தீக்குளித்தார்
இந்த நிலையில் ராஜா, நிர்மல் இடையே நேற்று மதியம் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக ராஜா மீண்டும் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தார். இதனிடையே போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி ராஜா போலீஸ் நிலையம் முன்பு நின்று தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ அவரது உடலில் பற்றி எரிந்ததால் அலறி துடித்தார். இதனைக் கண்ட போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிக்சைக்குபின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடி போலீஸ் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.