'ஜெயிலர் விநாயகர் சிலை'
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 27). மண்பாண்டக் கலைஞரான இவர் மண்பாண்டங்கள் மட்டுமல்லாமல் தெய்வங்கள் மற்றும் கால்நடைகள் என அனைத்து விதமான உருவ பொம்மைகளையும் செய்து வருகிறார். தீவிர ரஜினி ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் உருவ பொம்மையை செய்த இவர் அதனை ரஜினியிடம் நேரில் கொடுத்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் உள்ள ரஜினியின் தோற்றத்தில் விநாயகர் உருவ பொம்மையை செய்து அசத்தியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில் "இந்த ஜெயிலர் விநாயகரை 1½ அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தேன். மேலும் தலைவரின் தாய், தந்தையின் மார்பளவு போட்டோ ஒன்று கிடைத்தது. அதனை வைத்து அவர்களின் முழு உருவச்சிலையை செய்து வைத்துள்ளேன். அதனை தலைவரை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.
---