ஜெயின் சமூகத்தினர் போராட்டம்
ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சம்மத் சிகர்ஜி ஆலயத்தை சுற்றுலா தலமாக அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றுலா தலமாக மாற்றிய அந்த அறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஜெயின் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய கடைகளான நகை கடைகள், அடகு கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சுமார் 70 கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் ஜெயின் சமூகத்தினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சம்மத் சிகர்ஜி ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்றக்கூடாது, அம்மாநில அரசு அறிவித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும், இதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லுமாறு கூறியிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் விழுப்புரம் ஜெயின் சங்க தலைவர் ராஜேஷ்குமார், நிர்வாகிகள் கியான்சந்த் போரா, பிரவீண், சரூப், கஜேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திண்டிவனம்
இதேபோல் திண்டிவனம் ஜெயின் மகா சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது. இதை மேல்சித்தாமூர் ஶ்ரீ ஜினகஞ்சி மடம் சர்வஜிநாலய பரிபாலகர்கள் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள், ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக இளைய சுவாமிகள் தொடங்கி வைத்தனர். செஞ்சி ரோட்டில் இருந்து புறப்பட்ட பேரணி, தாலுகா அலுவலகத்துக்கு சென்றது. அங்கு தாசில்தாரிடம் அவர்கள், மனு கொடுத்தனர். இதில் நிர்வாகிகள் பப்ளாசா, ராம்லால் ரமேஷ், தினேஷ், ஜின்ராஜ், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மனு ஒன்று வருவாய் துறை அலுவலர் செல்வத்திடம் வழங்கப்பட்டது.