அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் 2024-ம் ஆண்டிற்குள் அமைக்கப்படும்


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் 2024-ம் ஆண்டிற்குள் அமைக்கப்படும்
x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம், 2024-ம் ஆண்டிற்குள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம், 2024-ம் ஆண்டிற்குள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் உள்ள வகுத்துமலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில் 110-விதியின் கீழ் அறிவித்தார்.

உத்தரவு

அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரமாண்ட மைதானம் அமைப்பதற்கு ஏதுவாக 2 இடங்களை தேர்வு செய்து முதல்-அமைச்சரிடம் தெரிவித்தோம். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியின் அருகிலேயே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி அலங்காநல்லூர் கீழக்கரை பகுதியில் அரசின் மேய்ச்சல்கால் புறம்போக்கு 66 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 16 ஏக்கரில் மைதானம் அமைக்கப்படும். அதற்கு என்னென்ன அனுமதிகள் தேவையோ அவற்றை எல்லாம் பெற்று இந்த பணி தொடங்கப்படும். வனப்பகுதி ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்த சூழலிலும் வன இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தாது.

மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த 66 ஏக்கருக்கு உட்பட்ட இடத்திலேயே குளம் ஒன்றும் உள்ளது. இந்த குளத்தை பயனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் சீர் செய்து அழகுப்படுத்தப்படும்.

அனுமதி

முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று, விரைவில் பணிகள் தொடங்கும். மேலும் 16 ஏக்கரில் மண் பரிசோதனை செய்து, இதை சமப்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பணிகள் நடைபெறும். 2024-ம் ஆண்டுக்குள் மைதானம் கட்டி முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இரவு-பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும். வாடிப்பட்டியில் இருந்து சிட்டம்பட்டி வரை நான்கு வழிச்சாலை உள்ளது. மைதானத்தில் இருந்து அந்த நான்கு வழிச்சாலையில் சுமார் 3 கி.மீ. தூரம் சாலை இணைக்கப்படும்.

புதுபாலங்கள்

ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டுவருவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக நான்கு வழிச்சாலையை இணைக்க நெடுஞ்சாலைதுறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். கிராமப்புற பகுதிகளில் பழைய பாலங்கள் இருந்தால் அகற்றி புதுபாலங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கலெக்டர் அனிஷ் சேகர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story