ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு ெவடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். காளைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்துராஜா, சின்னதுரை, நகர செயலாளர் செந்தில், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி, மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் கே.கே.சி. பெண்கள் கலை கல்லூரி அருகில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே ஒன்றுகூடி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
விராலிமலை
விராலிமலை காமராஜர் நகரில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு அ.தி.மு.க.வினர் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, விராலிமலை ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம்
கீரமங்கலத்தில் இதற்கு முன்பு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் உள்ள நக்கீரர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, அதன் நினைவாக பஸ் நிலையத்தில் அத்திமரக்கன்று நடப்பட்டது. இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, அதனை கொண்டாடும் விதமாக ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நட்டு வளர்க்கப்பட்ட அத்தி மரத்திற்கு மாலை அணிவித்தும், நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் கொண்டாடினார்கள்.
ஆலங்குடி
ஆலங்குடியில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை, கே.பி.கே.டி.தங்கமணி மற்றும் அரசு வழக்கறிஞர் கன்ராக் கணேசன் ஆகியோர் தலைமையில் வடகாடு முக்கத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.