கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்-மாடுகள் முட்டி 60 பேர் காயம்
கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டினர். மாடுகள் முட்டியதில் 60 பேர் காயம் அடைந்தனர்.
ஆத்தூர்:
ஜல்லிக்கட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து அடுத்த நாள் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் நிகழ்ந்த காலதாமதம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூலமேடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக அங்குள்ள நடுத்தெருவில் பிரமாண்ட பந்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் மற்றும் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. வீரர்கள் காயம் அடையாமல் இருக்க தேங்காய் நார் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன.
உறுதிமொழி ஏற்பு
ஜல்லிக்கட்டின் தொடக்கமாக காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், அகில இந்திய பிராணிகள் வதை தடுப்பு அலுவலர் டாக்டர் மிட்டல், கால்நடை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அதன்பிறகு முதலாவதாக கூலமேடு கிராம சாமி காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த மாட்டை மரபுப்படி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து சேலம், நாமக்கல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகள்
மொத்தம் 570 காளைகளும், 275 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். போட்டி 12 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 45 காளைகளும், 25 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை காளையர்கள் அடக்க முயன்றனர். ஆனால் பெரும்பாலான மாடுகள் காளையர்களிடம் சிக்காமல் தெறித்து ஓடின. சில காளைகள் களத்தில் நின்று 'எங்கிட்ட மோதாதே' என்று காளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
மல்லுக்கட்டிய காளையர்கள்
அதனை பார்வையாளர்கள் கைதட்டியும், விசில் அடித்தும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு காளைகளை அவிழ்க்கும்போதும், தங்க காசு, ரொக்கப்பணம், கட்டில், மெத்தை, சேர், டேபிள், சில்வர் அண்டா, சில்வர் போனி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த பரிசுகளை அள்ளி செல்ல காளையர்கள், காளைகளுடன் மல்லுக்கட்டினர். அவர்களை காளைகள் கால்களால் உதைத்தும், கொம்புகளால் முட்டியும் தூக்கி வீசின. ஆனாலும் அடங்காத காளையர்கள், திமிலை இறுக்கி பிடித்து, காளைகளை அடக்கி, தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
60 பேர் காயம்
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான காளை களத்தில் இறக்கி விடப்பட்டது. அதனை அடக்குவோருக்கு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த காளை, காளையர்களுக்கு போக்கு காட்டி, வெற்றி பெற்றது. இதனை இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ. ஜெயசங்கரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கண்டு ரசித்தனர்.
இந்தநிலையில் மாடுகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 60 பேர் காயம் அடைந்தனர். அதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வீரர்கள் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காலதாமதம்
ஜல்லிக்கட்டில் களம் காணும் காளைகளால் வீரர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க காளைகளின் கொம்புகளில் பாதுகாப்பு கவசம் அணிவிக்கும்படி கால்நடை பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் ஒரு சில மாடுகளுக்கு மட்டுமே பாதுகாப்பு கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விலங்குகள் நல வாரிய ஆணையர் டாக்டர் மிட்டல், கலெக்டர் கார்மேகத்திடம் தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து மாடுகளுக்கும் பாதுகாப்பு கவசம் அணிவித்த பின்னரே அவிழ்த்து விட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பின்னர் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையிலான குழுவினர் அனைத்து காளைகளுக்கும் கொம்பில் பாதுகாப்பு கவசம் அணிவித்து அவிழ்த்து விடுவதை கண்காணித்தனர். இதனால் போட்டி நடைபெறுவதில் சிறிது நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
காளை, காளையர்களுக்கு பரிசு
மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. முடிவில் களத்தில் சிறப்பாக நின்ற காளையின் உரிமையாளரான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியம்பட்டியை சேர்ந்த செந்தில்குமாருக்கு முதல்பரிசாக சோபா செட் வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த காளையின் உரிமையாளரான கூலமேடு கிராமத்தை சேர்ந்த சூர்யாவுக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10 ஆம்புலன்சுகளும், ஆத்தூர், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த போட்டியை கூலமேடு, ஆத்தூர், கீரிப்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.