ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்


ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் வீரத்துடன் அடக்கினர். மாடுகள் முட்டி 25 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

இதில், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 630 காளைகளும், 125 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து வீரத்துடன் அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணியளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து, காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள், சில்வர் அண்டா, குவளை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

25 பேர் காயம்

ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 25 பேர் காயமடைந்தனர். இதில் லேசான காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டை ஜெயங்கொண்டம், சின்னவளையம், பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, ஆயுதகளம், புதுச்சாவடி, மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, பரணம், ஆண்டிமடம், பெரிய கிருஷ்ணாபுரம், அழகாபுரம், திருக்களப்பூர், ஸ்ரீமுஷ்ணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழப்பள்ளம் புனித செபஸ்தியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


Next Story