தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு-புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. உறுதி
தச்சங்குறிச்சியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறும் என அமைதி பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் உறுதியளித்தார்.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கவிதாராமு தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய வழிகாட்டல் கடைப்பிடிக்கவில்லை எனவும், இதனை முழுமையாக செய்த பின் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த விழாக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று அதிகாலை 2.30 மணி வரை நடந்தது.
போலீசார் குவிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுவதை எண்ணி பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிராமமக்கள், விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தச்சங்குறிச்சியில் பாதுகாப்பு பணியில் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வாடிவாசலை அடைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே பொதுமக்கள் ஆவேசத்துடன் திரண்டு நின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது. இதற்கிடையே பக்கத்து கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காளைகளை பலர் சரக்கு வேனில் அழைத்துக்கொண்டு வந்தனர். இவ்வாறு வந்த வாகனங்களை ஊரின் எல்லைப்பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி, ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறி காளைகளை திருப்பி அனுப்பினர். இதேபோல் மாடுபிடி வீரர்களையும் திருப்பி அனுப்பினர்.
காளையால் பரபரப்பு
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக விழா மேடை, வாடிவாசல், இரும்பு தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்தின் அருகே ஒரு வீட்டில் கட்டியிருந்த காளையை திடீரென அவிழ்த்து விட்டனர். அந்த காளை ஜல்லிக்கட்டு திடலில் பாய்ந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தச்சங்குறிச்சியில் பொதுமக்களையும், ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரையும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து பேசினார். மேலும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.
அனுமதிக்காவிட்டால் போராட்டம்
அதன்பின் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''தச்சங்குறிச்சியில் திடீரென ஜல்லிக்கட்டை நிறுத்தியது வருத்தமளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் விழாக்குழுவினரோடு இணைந்து தேவையான முன்னேற்பாடுகளை செய்து ஜல்லிக்கட்டு நடப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்து இருக்கிறார்.
மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காவிட்டால் நானே முன் நின்று போராட்டம் செய்ய தயாராக உள்ளேன். மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர்களது நடவடிக்கை வேதனைக்குரியது. அரசியல் காரணம் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்'' என்றார்.
நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும்
இதற்கிடையில் தச்சங்குறிச்சியில் பொதுமக்கள், விழாக்குழுவினருடன் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை மற்றும் பொதுமக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டல் முறைகளில் விடுபட்டவைகளை நிறைவேற்றிவிட்டால் 8-ந் தேதி (அதாவது நாளை) ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் உறுதியளித்தார். இதற்கு விழாக்குழு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.