விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு


விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு
x

காரியாபட்டி அருகே ஆவியூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 20 வீரர்கள் காயம் அடைந்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே ஆவியூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 20 வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் அழகிய பெருமாள் கோவில் மற்றும் பெரிய கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு நலபெருமாள் வகையறா சார்பில் ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 8 மணிக்கு அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

பரிசுகள்

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், திமிலை பிடித்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் விழா குழுவினரால் வழங்கப்பட்டன. வெள்ளி நாணயம், சைக்கிள், குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயன்பாக்ஸ், சில்வர்பாத்திரம், பணம், வேட்டி, அண்டா போன்ற பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ெகாண்டு வரப்பட்டு இருந்த 690 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

20 பேர் காயம்

அருப்புக்கோட்டை உதவி சூப்பிரண்டு கரூண் காரட் உத்தரவின்பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 20-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.


Next Story