அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு
பொங்கலூர், ஏப்.24-
பொங்கலூர் அருகே அலகுமலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு 600 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டது. போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆய்வு மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு
பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) போட்டி நடைபெறுகிறது.
இதற்காக பார்வையாளர்கள் அமரும் கேலரி, வாடிவாசல், போட்டியில் கலந்து கொண்ட பின் மாடுகளை பிடிப்பதற்கான இடம், கால்நடைகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம், பார்வையாளர்கள் வந்தால் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதி உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
ஆய்வு
போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் மாவட்ட சப் -கலெக்டர் ஸ்ருத்தன் ஜெய் நாராயண் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 600 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்று போட்டிக்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.