தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. முதல்நாளில் 649 மனுக்கள் குவிந்தன.
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. முதல்நாளில் 649 மனுக்கள் குவிந்தன.
ஜமாபந்தி
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நேற்று தொடங்கியது. போடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தப்பட்டன. அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டது. ஒரு பயனாளிக்கு ரூ.22 ஆயிரத்து 500 இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு, மற்றொரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு, 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. தாசில்தார்கள் சுந்தர்லால், திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுத்தனர்.
649 மனுக்கள்
போடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் முதல் நாளில் 108 மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல், தேனியில் 214 மனுக்கள், ஆண்டிப்பட்டியில் 171 மனுக்கள், பெரியகுளத்தில் 92 மனுக்கள், உத்தமபாளையத்தில் 64 மனுக்கள் பெறப்பட்டன. 5 தாலுகா அலுவலகங்களிலும் மொத்தம் 649 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். தாலுகா அலுவலகங்களில் வருகிற 26-ந்தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. அதில், பொதுமக்கள் வருவாய்த்துறை மூலம் பெற வேண்டிய சான்றிதழ்கள், அரசு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் உள்பட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.