தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது


தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது
x

தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது. வேலூரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார்.

வேலூர்

ஜமாபந்தி

வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது.

வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) டாக்டர் பிரசன்னகுமார், தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்நாளில் சத்துவாச்சாரி உள்வட்டத்துக்கு உட்பட்ட சேண்பாக்கம், மேல்மாணவூர், பெருமுகை, சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், சிறுகாஞ்சி, சதுப்பேரி, அன்பூண்டி, கருகம்புத்தூர், பாலமதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்றார். ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 105 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்யமூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் முரளிதரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) பென்னாத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இதில் கே.வி.குப்பம், கீழூர், மேலூர், பில்லாந்திப்பட்டு, வேப்பங்கநேரி, ஆலங்கனேரி, மாச்சனூர், முருக்கம்பட்டு, காங்குப்பம், மேல்மாயில், மேல்மாங்குப்பம், நாகல், கீழ்ஆலத்தூர், பசுமாத்தூர், நெட்டேரி, காவனூர், சென்னங்குப்பம், பழைய கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களுக்கான முதல்நாள் ஜமாபந்தியில் 38 மனுக்கள் பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, பயிற்சி கலெக்டர் பிரியா, ஆகியோர் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தாசில்தார் அ.கீதா, தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் பா.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) வரை ஜமாபந்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் விஜயகுமார், நெடுமாறன், துணை தாசில்தார்கள் சுபிச்சந்தர், டி.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தி மேலாளர் கலைவாணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று பரதராமி, குடியாத்தம் நகரம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், செதுக்கரை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி, வி.டி.பாளையம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க குடியாத்தம் வட்ட தலைவர் எம்.செந்தில், செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர் காந்தி, வெங்கடாஜலபதி, ரகு, ஜெயமுருகன் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகாவில் உதவி கலெக்டர் கவிதா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி, தலைமை இடத்து துணை தாசில்தார் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் ரேவதி வரவேற்றார்.

முதல் நாளான நேற்று அணைக்கட்டு பிர்காவிற்கான ஜமாபந்தி நடந்தது. பொதுமக்கள் 66 பேர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

நாளை ஊசூர் பிர்காவில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மனுக்களை தரலாம் என தாசில்தார் வேண்டா தெரிவித்தார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் பேரணாம்பட்டு, ஜோடி கம்மவார் பல்லி, எருக்கம்பட்டு, கொத்தப் பல்லி, சி.டி.செருவு, குண்டலபல்லி, ரங்கம் பேட்டை, மாச்சம்பட்டு, வாசனாம்பல்லி, பத்தலபல்லி, ஏரிகுத்தி, பாலூர், சேராங்கல் ஆகிய 16 கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. வேலூர் தனித்துணை கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் நெடுமாறன் வரவேற்றார்.

பொதுமக்களிடமிருந்து 146 மனுக்கள் பெறப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் பலராமன், தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி, பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் உதயகுமார். மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

காட்பாடி

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் ஜமாபந்தி அலுவலராக இருந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை உள்பட 38 பேர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

காட்பாடி பிர்காவிலுள்ள கிராமங்களின் வருவாய் கணக்குகள் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. வருகிற 30-ந் தேதி ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.


Next Story