4 வயது சிறுமிக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு
திருவாரூரில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூரில் 4 வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜப்பானிய காய்ச்சல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவருக்கு 'ஜாப்பனீஸ் என்செபாலிடிஸ்' வைரஸ் காய்ச்சல் (ஜப்பானிய காய்ச்சல்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமி உடல் நலம் தேறி வருகிறாள்.
மேலும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் 17 குழந்தைகள், 9 ஆண்கள், 11 பெண்கள் உள்பட 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஓரிரு வாரத்துக்கு முன்பு அதிகரித்திருந்த காய்ச்சல் தற்சமயம் வெகுவாக குறைந்துள்ளது.
வதந்தி
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் கிராமத்தில் விருந்து சாப்பிட்டவர்கள் 20 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் செல்வமுருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம்.
அவர் சிகிச்சைக்கு வந்தபோதே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அவருக்கு தேவையான சிகிச்சைகளை, அதற்குரிய டாக்டர்கள் வழங்கினார்கள். இருப்பினும் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய உடல் சிகிச்சையை ஏற்கவில்லை. எனவே அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்ற தகவல் வதந்தி ஆகும். அவருடைய உடற்கூறு ஆய்வு அறிக்கை முதற்கட்டமாக வழங்கப்பட்டு விட்டது. அவருடைய உடல், உறுப்புகள் எந்த அளவிலான பாதிப்பை அடைந்துள்ளன என்பது குறித்த அறிக்கையை போலீசாரிடம் வழங்க இருக்கிறோம்.
அசைவ உணவு
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பழைய இறைச்சி இல்லை என்பதை உறுதி செய்தபிறகே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் ஏதாவது உடல் கோளாறுகள் ஏற்பட்டால், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.