திருமூர்த்தி மலைக்கோவிலில் கரகம் எடுத்து வழிபாடு செய்த ஜப்பானியர்கள்
ஜப்பான் நாட்டு பக்தர்கள் திருமூர்த்தி மலையில் கரகம் எடுத்து அமணலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.
திருப்பூர்,
மேற்கு தொடர்ச்சி மலைகளின் பெருந்தொடர்களில், தென்திசை நோக்கி பரவியுள்ள ஆனை மலைத்தொடரின் அடிவாரத்தில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்திலிருந்து தென்மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் தோணி ஆறு என்ற பாலாற்றங்கரையில் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆன்மிக பயணமாக திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிக்கு வருகை தந்தனர். வனப்பகுதியில் உள்ள பஞ்ச லிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், யாகமும் செய்த அவர்கள், திருமூர்த்தி மலையில் கரகம் எடுத்து அமணலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.
மேலும் திருமூர்த்தி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியிலும் ஜப்பான் நாட்டு பக்தர்கள் ஈடுபட்டனர்.