ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் பூத் கமிட்டி முகவர்கள் நியமனம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைச்செயலாளா் முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி, மாவட்ட அவைத்தலைவா் வீ.பி.மூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல செயலாளா் கந்தசாமி பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளா் பரமகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி அ.தி.மு.க. நிறுவனா், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள், பிப்ரவரி 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், பூத் கமிட்டி முகவர்கள், புதிய வாக்காளா்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை மற்றும் கருத்து கேட்கப்பட்டது.
நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் கொடியேற்றி வைக்கவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைத்து பகுதிகளிலும் முகவர்கள் நியமிப்பது, செயலாற்றுவது குறித்து விளக்கவுரை அளிக்கப்பட்டது.
கடையநல்லுார், சங்கரன்கோவில், வாசுதேவநல்லுார் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய செயலாளா்கள், பேரூர் கழக செயலாளா்கள், நகர கழக செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.