வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்துவிட்டார் -சசிகலா பரபரப்பு பேட்டி


வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்துவிட்டார் -சசிகலா பரபரப்பு பேட்டி
x

எங்களுக்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற மறுத்துவிட்டார் என்று சசிகலா கூறினார்.

சென்னை,

தற்போது அவர்கள் (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் பெங்களூருவில் இருந்து வெளியே வந்த போது என்ன சொன்னேனோ, அதை தான் இன்றைக்கும் சொல்கிறேன். நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி அடைவோம்.

அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதற்கான பணிகளை நான் தொடங்கி விட்டேன்.

முதுகில் குத்தியவர்கள்

வழக்கின் (சொத்துக்குவிப்பு) தீர்ப்பு தொடர்பாக நான் பெங்களூரு செல்ல வேண்டிய சமயத்தில் கூட அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் சென்றேன். அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்பதை திரும்பவும், தைரியமாகவும் நான் இப்போதும் சொல்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக நான் இருக்கும்போது சண்டை போடுவது வேறு. ஆனால் நான் இல்லாதபோது முதுகிற்கு பின்னால் குத்துவது மனிதர்களே கிடையாது.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழுவில் எய்ம்ஸ், தனியார் ஆஸ்பத்திரி, தமிழக அரசு டாக்டர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தினமும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை கொடுத்தார்கள். அப்படி இருக்கும்போது இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லையே. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல அவருக்கு சிகிச்சை அளித்த வெளிநாட்டு டாக்டர்களே அவரிடம் நேரடியாக கேட்டார்கள்.

அதற்கு ஜெயலலிதா, வேண்டாம். சென்னையில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. இங்கு இல்லாத சிகிச்சைகளே கிடையாது. வேண்டும் என்றாலும் வெளியில் இருந்து டாக்டர்களை வரவைக்கலாம் என்று சொன்னார்.

எனினும் எங்களுக்கு அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் ஜெயலலிதா திட்டவட்டமாக இங்கு சிகிச்சை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

டாக்டர்களுக்கு பரிசு

ஜெயலலிதாவை சிகிச்சை முடித்து வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்திருந்தோம். தனக்கு சிகிச்சை அளித்த அனைவருக்கும் அன்பளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்று சொன்னார். உடனே நாங்கள் ஜூவல்லரியில் இருந்து ஊழியர்களை வரவழைத்தோம். டாக்டர்களுக்கு கம்மல், கையில் போடுவதற்கு வளையல் என அனைத்தையும் ஜெயலலிதாவே தேர்வு செய்தார்.

எங்களுக்கு இத்தனை ஜோடி செய்துக்கொடுங்கள். டிசம்பர் 15-ந்தேதி அன்று டெலிவரி செய்யுங்கள். ஜெயலலிதா கையால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் இருந்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story