அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளை
ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ராணிசத்திரதெரு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் சதீஷ் (வயது 35). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்த சமயம் யாரோ மர்ம நபர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.28 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்று விட்டார். இந்த வீட்டின் அருகில் ராமநாதபுரம் தனியார் வங்கி உதவி மேலாளர் கேசவன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்கை மர்ம நபர் திருடி சென்று விட்டார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த மேற்கண்ட இருவரும் தங்கள் வீடுகளில் திருடு போயிருப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். ராமநாதபுரத்தில் பூட்டி இருந்த அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.