2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
பெரம்பலூர் அருகே 2 வீடுகளில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தனியாக வசித்த பெண் வீட்டில்...
பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் அருகே மேட்டூர் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணசாமி(வயது 55). விவசாயி. இவருக்கு லோகமணி என்ற மனைவியும், மதுபாலன், பாலாஜி என்ற 2 மகன்களும் உள்ளனர். மதுபாலன் கொளக்காநத்தத்தில் தங்கியிருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். டிரைவரான பாலாஜி நேற்று வேலைக்கு சென்று விட்டார். கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
அங்குள்ள கொட்டகையில் ஆடு, மாடுகள் இருப்பதால், அதனை பார்த்து கொள்வதற்காக தினமும் இரவு 10 மணிக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கிருஷ்ணசாமி தனது மனைவி லோகமணியை மட்டும் வீட்டில் தனியாக விட்டு விட்டு கொட்டகைக்கு சென்று விட்டார். லோகமணி வீட்டின் பின்பக்க கதவை உள்தாழ்பாள் போட்டு விட்டு, முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
1 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு
நேற்று அதிகாலை 4 மணிக்கு மாடுகளில் பால் கறக்க செல்வதற்காக எழுந்த லோகமணி வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வீட்டின் பின்பக்க கதவை சென்று பார்த்தபோது அது திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் கணவர் கிருஷ்ணசாமியை அழைத்து வந்து வீட்டினுள் பார்த்த போது பீரோவில் இருந்த 1 பவுன் நகை, 1 வெள்ளி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி விட்டு பின்பக்க கதவை திறந்து அதன் வழியாக தப்பி சென்றதது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
புதுநடுவலூர் 1-வது வார்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 76). விவசாயி. இவருக்கு அதே கிராமத்தில் 2 வீடுகள் உள்ளன. தங்கவேலும், அவரது மனைவி முத்துக்கண்ணும் பகல் நேரத்தில் ஒரு வீட்டில் இருந்து விட்டு, இரவு நேரத்தில் தூங்குவதற்கு மற்றொரு வீட்டிற்கு செல்வது வழக்கம். அவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஒரு வீட்டை பூட்டி விட்டு தூங்குவதற்காக மற்றொரு வீட்டிற்கு சென்றனா். நேற்று காலை 6 மணியளவில் தங்கவேல் எழுந்து வந்து பார்த்த போது பகல் நேரத்தில் வசிக்கும் வீட்டில் பூட்டு இல்லாமல் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் நகையும், ரூ.2 ஆயிரத்து 200-ம் திருடு போயிருந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து தகவலறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரே கும்பலை சேர்ந்த மர்மநபர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.