3 வீடுகளில் நகை-பணம் திருட்டு
3 வீடுகளில் நகை-பணம் திருட்டுபோனது.
எலக்ட்ரீசியன்
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு அம்மன் நகர் 2-வது குறுக்கு தெருவை சோ்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). இவருக்கு ரமா பிரபா (41) என்ற மனைவியும், மோனிஷா (12), கவினி (8) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ஞானசேகரன் இத்தாலியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் பெரம்பலூரில் உள்ள வீட்டில் ரமா பிரபா தனது மகள்களுடன் வசித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி ரமா பிரபா வீட்டை பூட்டிவிட்டு, தனது மகள்களை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள தனது தங்கை சரண்யா வீட்டிற்கு சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து அவர் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நகை- பணம் திருட்டு
இந்நிலையில் நேற்று காலை ரமா பிரபாவின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள், இது பற்றி ரமா பிரபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், லால்குடியில் இருந்து பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டின் பூட்டு, தாழ்ப்பாள் மற்றும் அறைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது ெதரியவந்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் வசந்த்(27). இவரது மனைவி சுமித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் சிவநேத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. மேலும் அவர்களுடன் வசந்தின் தாய் கலைச்செல்வி (50) வசித்து வருகிறார். வசந்த், அருமடல் பிரிவு சாலையில் கிரஷர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வசந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை வசந்த் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கும், வசந்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, வசந்த் வீட்டின் பூட்டு மற்றும் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
காசிக்கு சென்றவர் வீட்டில்...
மேலும் பெரம்பலூர்-எளம்பலூர் ரோட்டில் உள்ள தங்கம் நகரை சேர்ந்தவர் முத்தையா (63). இவருக்கு அடைக்கம்மை என்ற மனைவியும், சுப்பிரமணியன், பழனியப்பன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் சுப்பிரமணியன் வங்கதேசத்திலும், பழனியப்பன் அபுதாபியிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பெரம்பலூரில் உள்ள வீட்டில் முத்தையாவும், அடைக்கம்மையும் மட்டும் வசித்து வருகின்றனர். கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு முத்தையாவும், அடைக்கம்மையும் காசிக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வேலைக்கார பெண், அந்த வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பூஜை அறையில் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
உண்டியல் பணம்
மேலும் முத்தையாவிடம் போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, உண்டியலில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு ஸ்பிரே அடித்துள்ள மர்மநபர்கள் கேமராவின் டி.வி.ஆர். ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே திருட்டு நடந்த வீடுகளுக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.