நூதன முறையில் மூதாட்டியிடம் நகை 'அபேஸ்'


நூதன முறையில் மூதாட்டியிடம் நகை அபேஸ்
x

பழனி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகை ‘அபேஸ்’ செய்யப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி காளியாத்தாள் (வயது 70). இவர், பழனி அருகே மரிச்சிலம்பில் உள்ள உறவினரை பார்க்க செல்வதற்கு பழனி பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ்நிலைய பகுதியில் வந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் மூதாட்டியிடம் உறவினர்களை தனக்கு நன்றாக தெரியும், நான் அங்குதான் செல்கிறேன், உங்களை அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி மோட்டார் சைக்கிளில் காளியாத்தாளை ஏற்றி புதுதாராபுரம் சாலையில் சென்றார்.

குபேரபட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். காளியாத்தாளிடம், தங்க நகையை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றால், போகும் வழியில் திருடர்கள் பறித்து விடுவார்கள். எனவே அதை கழற்றி சேலையில் முடிந்து வைத்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார். இதனையடுத்து நகையை கழற்றி அவரிடம் காளியாத்தாள் கொடுத்தார். அந்த நபர், நகையை ஒரு காகிதத்தில் பொட்டலமாக மடித்து கொடுப்பது போல கொடுத்தார். அதனை வாங்கிய காளியாத்தாள், தனது சேலையில் முடிந்து வைத்து கொண்டார். அதன்பிறகு அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

வெகுநேரம் ஆகியும் அந்த நபர் வராததால் காளியாத்தாளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நபர் கொடுத்து சென்ற காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அப்போது அதில் சிறிய கல் இருந்தது. அந்த நபர் ஏமாற்றி நகையை 'அபேஸ்' செய்தது தெரியவந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story