அரசு பெண் அதிகாரியிடம் 13 பவுன் நகை பறிப்பு
ஓசூரில் அரசு பெண் அதிகாரியிடம் 13 பவுன் நகையை பறித்து மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்
அரசு அதிகாரி
ஓசூர் அலசநத்தம் தோட்டகிரி சாலை லட்சுமி நரசிம்மன் நகரை சேர்ந்தவர் ஜலஜா (வயது 56). குழந்தைகள் பாதுகாப்பு திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஓசூர் தோட்டகிரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜலஜா கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜலஜா அலறினார்.
விசாரணை
அதற்குள் நகையை பறித்த கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஜலஜா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.