கருவேப்பிலங்குறிச்சி அருகே தி.மு.க. பிரமுகரின் மனைவியிடம் நகை பறிப்பு
கருவேப்பிலங்குறிச்சி அருகே தி.மு.க. பிரமுகரின் மனைவியிடம் நகையை பறித்து சென்றுவிட்டனா்.
விருத்தாசலம்,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது மனைவி விஜயா (வயது 54). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேந்திர பட்டினத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, டி.வி. புத்தூர் அருகே வெள்ளாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென அவர்களை வழிமறித்து விஜயா கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர்.
இதற்கிடையே, செயினை பிடித்து இழுத்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கருணாநிதி, விஜயா ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.