2 பெண்களை கத்திமுனையில் மிரட்டி 15½ பவுன் நகைப்பறிப்பு
ஓசூர்
ஓசூரில் 2 பெண்களை கத்திமுனையில் மிரட்டி 15½ பவுன் நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓட்டல் உரிமையாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (வயது 48). ஓட்டல் உரிமையாளா். இவர் வழக்கம் போல் பத்தலப்பள்ளியில் உள்ள ஓட்டலுக்கு சென்று விட்டார். வீட்டில் மார்ட்டின் ராஜாவின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் லூர்துசாமி ஆகியோர் இருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் 3 பேர் திடீரென புகுந்தனர். அவர்கள் மார்ட்டின் ராஜாவின் மனைவியை கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தனர். அதேபோல மாமியார் லூர்து மேரியையும் அந்த நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தனர்.
நகைப்பறிப்பு
பின்னர் அந்த நபர்கள் வீட்டின் பீரோவை திறக்க சொல்லி அதில் இருந்த 7½ பவுன் நகையை எடுத்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் நகைகளுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது மார்ட்டின் ராஜா வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து மார்ட்டின் ராஜாவை தாக்கினர். இதையடுத்து அவர் வெளியே ஓடினார்.
பின்னர் மர்ம நபர்கள் நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மார்ட்டின் ராஜா சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் விசாரணை
புகாரின்பேரில் ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த 3 கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.