ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு
வாழப்பாடி:-
வாழப்பாடியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற தாசில்தார்
சேலம் மாவட்டம் வாழப்பாடி செல்லியம்மன் நகரில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 63). இவர் வாழப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் தாசில்தாராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார். இவருடைய மனைவி விஜயலட்சுமி.
இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் விஜயலட்சுமியை அங்கு விட்டு விட்டு, சின்னசாமி நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவருடைய வீடு திறந்து கிடந்தது.
7½ பவுன் திருட்டு
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னசாமி, வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஓடி வந்தார். அவர், சின்னசாமி முகத்தில் துணியை போட்டு விட்டு, அங்கிருந்து ஓடினார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன்சின்னசாமி பிடிக்க முயன்றார். ஆனால் மர்ம நபர் தப்பி ஓடி, தலைமறைவானார்.
சின்னசாமி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 7½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. மேலும் பட்டுப்புடவை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்கள் சேகரிப்பட்டன.
இந்த திருட்டு குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருட்டு சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.