பொற்றையடி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நகைக்கடை டிரைவர் பலி
பொற்றையடி அருகே சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பிரபல நகைக்கடை டிரைவர் பரிதாபமாக பலியானார்.
தென்தாமரைகுளம்,
பொற்றையடி அருகே சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பிரபல நகைக்கடை டிரைவர் பரிதாபமாக பலியானார்.
நகைக்கடை டிரைவர்
கொட்டாரம் அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு திரும்புவது வழக்கம்.
தடுப்புச்சுவரில் மோதியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தரம் வேலை முடிந்து வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரம் பகுதியில் 4 வழிச்சாலை பணிகள் நிறைவடையாததால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் வைக்கப்பட்டிருந்தது. சுந்தரம் அந்த வழியாக வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சுந்தரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.