டயர் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை-செல்போன் திருட்டு


டயர் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை-செல்போன் திருட்டு
x

டயர் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் நகை-செல்போன் திருட்டுபோனது.

பெரம்பலூர்

தேனி மாவட்டம், சாத்தாகோவில்பட்டியை சேர்ந்த கருப்பையாவின் மகன் சிவா (வயது 27). இவர் தனது மனைவி அழகுராணியுடன் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர் 7-வது குறுக்கு தெருவில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். மேலும் சிவா விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று சிவாவும், அழகுராணியும் வீட்டை பூட்டி சாவியை வெளியே வைத்து விட்டு பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க சென்றனர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் டப்பாவில் வைத்திருந்த 2½ பவுன் நகை மற்றும் செல்போன் ஒன்று திருட்டு போயிருந்தது. இதையடுத்து சிவா எதிரே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அதில், சுடிதார் அணிந்த 2 இளம்பெண்கள் சிவா வீட்டின் உள்ளே சென்று வருவது பதிவாகியிருந்தது. மேலும் அந்த பெண்கள் அந்தப்பகுதியில் காலை முதல் மதியம் வரை சுற்றித்திரிந்தாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பெண்கள்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவாவின் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போனதாக கூறப்படுகிறது.


Next Story