கோர்ட்டு பெண் ஊழியர், போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு
திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் கோர்ட்டு பெண் ஊழியர், போலீஸ்காரர் மனைவி உள்ளிட்டோரிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பியுள்ளனர்.
திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் கோர்ட்டு பெண் ஊழியர், போலீஸ்காரர் மனைவி உள்ளிட்டோரிடம் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பியுள்ளனர்.
நீதிமன்ற பெண் ஊழியர்
திருவண்ணாமலை நொச்சிமலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வைதேகி திருவண்ணாமலை கோர்ட்டில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு இரவு சுமார் 9 மணியளவில் மொபட்டில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தார். நொச்சிமலை அருகில் செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென வைதேகியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பிடித்து இழுத்து உள்ளனர். இதில் சுதாரித்து கொண்ட அவர் தங்க செயினை கையால் பிடித்து கொண்டார்.
இதில் பாதி செயின் அறுந்து 1½ பவுனை பறித்து கொண்டு அந்த நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து வைதேகி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்- இன்பெக்டர் மனைவி
இதேபோல் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை தீபம் நகர் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி குழந்தையை டியூசனில் விட்டு, விட்டு வீடு திரும்பி வரும் போது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று உள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அன்று இரவு திருவண்ணாமலை தீபம் நகர் வழியாக ஆந்திராவில் இருந்த கார் ஒன்று திருவண்ணாமலை நோக்கி வந்து உள்ளது. அப்போது மர்ம நபர்கள் சிலர் காரை மறித்து உள்ளனர். காரை டிரைவர் நிறுத்தாததல் அவர்கள் கவரில் கட்டி வைத்து பெட்ரோலை வீசியதாக கூறப்படுகிறது. இதில் சுதாரித்து கொண்ட கார் டிரைவர் அங்கு நிற்காமல் வேகமாக அங்கிருந்து தப்பி சென்று திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்ததாக கூறப்படுகிறது.
மக்கள் அச்சம்
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது பெட்ரோல் எதுவும் வீசப்படவில்லை. சிலர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அங்கிருந்து தப்பி வந்த ஆந்திராவை சேர்ந்தவர்கள் புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டனர். இருப்பினும் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை நேற்று முன்தினம் நடைபெற்ற தொடர் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலையில் கடந்த ஓரிரு மாதங்களாக வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
எனவே இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.