வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகை திருட்டு
ஓசூர் அருகே பேரிகையில் வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்
நகை திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரமூர்த்தி (வயது 56). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். இவருடைய மனைவி மற்றும் 2 மகள்கள் தரைத்தளத்தில் தூங்கினார்கள்.
அப்போது மர்ம நபர்கள். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். மேலும் வீட்டின் அறையில் இருந்த, 10½ பவுன் நகையை திருடினார்கள்.
போலீசார் விசாரணை
சத்தம் கேட்டு எழுந்த ஸ்ரீதரமூர்த்தியின் மனைவி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ஸ்ரீதரமூர்த்தி பேரிகை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் அங்குமிங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த திருட்டு தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.