முத்தாரம்மன் கோவிலில் நகைகள் கொள்ளை
பறக்கை அருகே உள்ள முத்தாரம்மன் கோவிலின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பறக்கை அருகே உள்ள முத்தாரம்மன் கோவிலின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
நகைகள் கொள்ளை
பறக்கை அருகே உள்ள புல்லுவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சமுத்திரராஜன் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பூஜைகள் முடிந்து வழக்கம் போல் கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலையில் கோவிலுக்கு வந்த போது, வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது முத்தாரம்மன் நெற்றியில் இருந்த 4 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க பொட்டுகளும், 8 கிராம் எடை கொண்ட 2 தங்க தாலி சங்கிலிகளும், 8 வெண்கல குத்துவிளக்குகளும் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் கோவிலின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் குத்துவிளக்குகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணை
மேலும் முத்தாரம்மன் கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் அதன் அருகில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலின் முன் பக்க கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். முடியாததால், அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி பூசாரி சமுத்திரராஜன் கோவில் தலைவர் நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊரின் மையப் பகுதியில் உள்ள கோவிலில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.