பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
சாணார்பட்டி அருகே பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாணார்பட்டி அருகே உள்ள கொண்டன்செட்டிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி (வயது 37). இன்று இவர், பக்கத்து கிராமமான ராமன்செட்டிபட்டிக்கு 100 நாள் வேலைதிட்ட பணிக்காக சென்றிருந்தார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், செல்வியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் செல்வியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதில், சுதாரித்துக்கொண்ட செல்வி தனது தங்க நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் நகை அறுந்தது. அப்போது செல்வி கையில் பாதி நகையும், மர்ம வாலிபர்கள் கையில் பாதி நகையும் சிக்கியது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.