மதுரை சிறையில் கொல்லப்பட்ட கைதியின் மனைவிக்கு வேலை, இழப்பீடு - கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை சிறையில் கொல்லப்பட்ட கைதியின் மனைவிக்கு வேலை, இழப்பீடு வழங்க கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரையைச் சேர்ந்த திருச்செல்வி என்ற திருக்கம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் எனது கணவர் செந்தில் கைதானார். அவரை போலீசார் விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மற்றொரு கைதியால் கொல்லப்பட்டார். எனது கணவர் இறந்ததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம். எனவே எனக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் கணவர் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்கக்கோரி இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்து உள்ளார். எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணை அமைப்பிடம் இருந்து மனுதாரர் கணவர் இறந்த வழக்கின் அறிக்கையைப் பெற்று, அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து 12 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.