நெசவு தொழிலாளர்கள் வேலை இழப்பு:10 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தம்வேட்டி- சேலை உற்பத்திக்கு நூல் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
10 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் வேட்டி- சேலை உற்பத்திக்கு நூல் கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் உள்ளனா்.
ஈரோட்டில் ஆர்டர்கள் இல்லாமல் 10 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் நெசவுத்தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இலவச வேட்டி- சேலை உற்பத்திக்கான நூல்கள் எப்போது வரும் என்று நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
விசைத்தறி
விசைத்தறி தொழிலில் முன்னணியில் இருக்கும் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தறிகள் நிறுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. ஈரோடு, லக்காபுரம், சித்தோடு ஆகிய ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இந்த தறிகளில் பருத்தி நூல் மூலம் நெசவுத்தொழில் செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் நாடு முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஆர்டர்கள் வழங்கி இந்த பணியை செய்து வருகின்றன.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செயற்கை இழை நூலான ரயான் நூல்களில் ஈரோடு விசைத்தறியாளர்கள் துணி உற்பத்தி செய்து வந்தனர். அந்த காலக்கட்டத்தில் பருத்தி நூல் விலை உயர்ந்ததால், தறிகளை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் ரயான் துணி உற்பத்தியை செய்து வந்தனர்.
உற்பத்தி பாதிப்பு
ஆனால், ரயான் துணிகள் விற்பனை மந்தம் ஏற்பட்டு உள்ளதால், ஈரோட்டில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஈரோட்டில் சுமார் 10 ஆயிரம் தறிகள் மீண்டும் பருத்தி நூலில் துணி உற்பத்திக்கு மாற்றப்பட்டன. இப்படி பருத்தி நூல், ரயான் நூல் என 2 வகை துணி உற்பத்தியும் ஈரோட்டில் நடந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விசைத்தறிக்கூடங்களில் தறிகள் இயக்கப்படாமல் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியவலசு, லக்காபுரம், சித்தோடு பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகிறார்கள்.
நஷ்டம்
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் பா.கந்தவேலு கூறியதாவது:-
ஈரோடு விசைத்தறியாளர்களின் நிலைமை இப்போது கடும் சிரமத்தில் இருக்கிறது. தறிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயான் நூல் மூலம் உற்பத்தி செய்யும் துணிகள் விற்பனை குறைந்து விட்டது. இதனால் நாங்கள் தயாரித்த துணிகள் அப்படியே கிடக்கிறது. பருத்தி நூலை பொறுத்தவரை தற்போது ஒரு பேல் (170 கிலோ) எடை கொண்ட பருத்தி நூல் ரூ.54 ஆயிரமாக குறைந்து விட்டது. ஆனால், "ஆர்டர் முறையில் அதாவது ஜாப் ஒர்க்" முறையில் இப்போது விசைத்தறிகள் ஓட்ட முடியாததால் இதுவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் பல்லடம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவு பஞ்சு ஆலைகள் வேலை நிறுத்தம் காரணமாக அது சார்ந்த துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வேலை இழப்பு
எனவே தற்போதைய நிலையில் 10 ஆயிரம் விசைத்தறிகள் இயக்க முடியாத சூழலில் இருக்கிறது. ஏற்கனவே வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே நெசவு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இப்போது அதுவும் குறைக்கப்பட்டு ஏராளமானவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
வழக்கமாக இதுபோன்ற சூழல்கள் வரும்போது தமிழக அரசின் இலவச வேட்டி- சேலை உற்பத்தி எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதனால் வெளி மார்க்கெட்டில் வரும் ஏற்றத்தாழ்வுகள் எங்களை பெரிய அளவில் பாதிக்காது.
இலவச வேட்டி-சேலை
ஆனால், இந்த ஆண்டு இதுவரை இலவச வேட்டி- சேலை உற்பத்தி தொடங்கப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலையில் இருந்து வேட்டிக்கான பாவு நூல் முன்கூட்டியே வழங்கி விடுவார்கள். அதை நாங்கள் தறிகளில் போடும் பணியில் இருப்போம். இதற்கிடையே டெண்டர் முடிந்து பணிகள் தொடங்கி விடும். எனவே பாதிப்பு இருக்காது. ஆனால் இதுவரை பாவு நூல் வழங்கப்படவில்லை.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், வேட்டிக்கு என்ன நூல் போடுவது என்று இன்னும் அரசு கொள்கை முடிவு செய்யவில்லை. எனவே எங்களால் வழங்க முடியாது என்கிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகளும், தமிழ்நாடு அரசும் உடனடி நடவடிக்கை எடுத்து இலவச வேட்டி- சேலை உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயான் துணி விற்பனை, பருத்தி நூல் ஆடை உற்பத்தி ஆகியவற்றிலும் கவனம் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.