இந்திய குடிமைப்பணிகளுக்கான ஆயத்த பயிற்சி திட்டத்தில் சேர மீனவ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்திய குடிமைப்பணிகளுக்கான ஆயத்த பயிற்சி திட்டத்தில் சேர மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆயத்த பயிற்சி திட்டம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக ஆயத்த பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
31-ந் தேதி கடைசி நாள்
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.inஎன்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஆய்வாளர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெரம்பலூர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும், பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசி எண்ணையும், 6381344399 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.