ராணுவ கல்லூரியில் சேரஜூன் 3-ந்தேதி எழுத்து தேர்வு:கலெக்டர் செந்தில்ராஜ்
ராணுவ கல்லூரியில் சேர ஜூன் 3-ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ராணுவ கல்லூரியில் சேருவதற்கு ஜூன் மாதம் 3-ந் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராணுவ கல்லூரி
டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மையங்களில் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும்.
எழுத்து தேர்வானது ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியவை ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முக தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பம்
ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முக தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும். இந்த தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடுன், உத்தரகாண்ட் 248003 என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையவழி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
காசோலை மூலமாக கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி டேராடுன் அவர்களுக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல் பவன். டேராடுன் (வங்கி குறியீடு 0576) உத்தரகாண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூ.600-யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இணையவழி மூலமாக ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூ.500-யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு விரைவு தபால் மூலம் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடுன், உத்தரகாண்ட் 248003-லிருந்து அனுப்பப்படும்.
தகுதிகள்
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 2-1-2011-க்கு முன்னதாகவும் 1-7-2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் போது, அதாவது 1-1-2024-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு 15.4.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளத்தை காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.