பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேரவிண்ணப்பிக்கலாம்


பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேரவிண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆதிதிராவிட மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

குமரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள்-3, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள்-6, கல்லூரி மாணவர் விடுதி-1, கல்லூரி மாணவிகள் விடுதி-1 மற்றும் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி-1 என மொத்தம் 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் விவரம் வருமாறு:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கிற மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளிலும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதிகளிலும் சேரத்தகுதியுடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் (85 சதவீதம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர்கள் (10 சதவீதம்), பிற வகுப்பினர்கள் (5 சதவீதம்) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படுவர். விடுதிகளில் அனுமதிக்கப்படும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணை இலவச சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படுகின்றன.

30-ந்தேதி வரை...

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3, வங்கி கணக்கு புத்தக நகல், சாதிசான்று நகல், வருமான சான்று நகல், மாற்று சான்றிதழ் நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து, பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் பொருந்தாது.

மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் சான்று இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு எமிஸ் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்திய-மாநில அரசால் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண்கள் கட்டாயமாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டும். விடுதிகளில் சேர்வதற்கு விடுதி காப்பாளர் உதவியுடனோ அல்லது மாணவர்கள் நேரடியாகவோ https://tnadw-hms.in என்ற இணையதளத்தில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அரசின் இந்த சலுகையை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story